உயிரற்ற பொருட்களின் சாட்சி
உயிரற்ற பொருட்களின் சாட்சி
மறுமை நாளில், ஒருவர் செய்த காரியத்தை நிரூபிப்பதற்கு அவர் அந்தக் காரியத்தை செய்வதற்குப் பயன்படுத்திய பொருட்களே போதுமானதாக இருக்கும். இவ்வாறு நல்லவர்களும் கெட்டவர்களும் பயன்படுத்தும் பொருட்களை தேவைப்படின் அவற்றையும் சாட்சியாகக் கொண்டுவரும் ஆற்றல் அல்லாஹ்விற்கு இருப்பதை நாம் மறந்துவிடக் கூடாது. ஒருவர் திருடினார் என்பதற்கு அவர் திருடிய பொருளை இறைவன் நாடினால் சாட்சியாகக் கொண்டுவருவான்.
ஒருவர் மார்க்கத்தை மக்களுக்குச் சொன்னார் என்பதற்கு அவர் அதற்குப் பயன்படுத்திய மைக்கையோ, எழுதுகோலையோ கூட சாட்சியாகக் கொண்டுவர முடியும். இதை விளங்கிய பிறகாவது நமது செயல்களை நாம் சீர்திருத்திக் கொள்ள வேண்டும்.
اَقِمِ الصَّلٰوةَ لِدُلُوْكِ الشَّمْسِ اِلٰى غَسَقِ الَّيْلِ وَقُرْاٰنَ الْـفَجْرِؕ اِنَّ قُرْاٰنَ الْـفَجْرِ كَانَ مَشْهُوْدًا
சூரியன் சாய்ந்ததிலிருந்து இரவில் இருள் சூழும் வரையில் தொழுகையையும் பஜ்ரு (தொழுகையில்) குர்ஆனையும் நிலை நாட்டுவீராக! பஜ்ரு (தொழுகையின்) குர்ஆன் சாட்சி கூறப்படுவதாக இருக்கிறது.
(அல்குர்ஆன்: 17:78)
إِنِّي أَرَاكَ تُحِبُّ الغَنَمَ وَالبَادِيَةَ، فَإِذَا كُنْتَ فِي غَنَمِكَ وَبَادِيَتِكَ، فَأَذَّنْتَ بِالصَّلاَةِ، فَارْفَعْ صَوْتَكَ بِالنِّدَاءِ، فَإِنَّهُ «لاَ يَسْمَعُ مَدَى صَوْتِ المُؤَذِّنِ جِنٌّ وَلاَ إِنْسٌ وَلاَ شَيْءٌ إِلَّا شَهِدَ لَهُ يَوْمَ القِيَامَةِ»
அப்துல்லாஹ் பின் அப்திர் ரஹ்மான் (ரஹ்) அவர்கள் கூறியதாவது:
அபூசயீத் அல்குத்ரீ (ரலி) அவர்கள் என்னிடம், “ஆட்டையும் பாலைவனத்தையும் விரும்புபவராக உங்களை நான் காண்கிறேன். நீங்கள் ஆட்டை மேய்த்துக் கொண்டோ, அல்லது பாலைவனத்திலோ இருக்க (தொழுகை நேரம் வந்து) நீங்கள் தொழுகைக்காக அழைப்புக் கொடுப்பீர்களாயின் உங்கள் குரலை உயர்த்தி அழையுங்கள்.
ஏனெனில், தொழுகைக்காக அழைப்பவரின் குரல் ஒலிக்கும் தொலைவு நெடுகவுள்ள ஜின்களும், மனிதர்களும், பிற பொருள்களும் அதைக் கேட்டு அவருக்காக மறுமை நாளில் சாட்சி சொல்கின்றன” என்று கூறிவிட்டு, “இதை நான் அல்லாஹ்வின் தூதரிடமிருந்து கேட்டேன்” என்று சொன்னார்கள்.
நூல்: புகாரி-3296
ஒரு நாள் நபி (ஸல்) அவர்கள் மிம்பரில் அமர்ந்தார்கள். நாங்களும் அவர்களைச் சுற்றி அமர்ந்தோம். அப்போதவர்கள் “என் வாழ்விற்குப் பின், உங்களுக்கிடையே உலகவளங்களும் அதன் கவர்ச்சிப் பொருட்களும் தாராளமாகத் திறந்து விடப்படுவதைப் பற்றியே நான் அஞ்சுகிறேன்” எனக் கூறினார்கள்.
ஒருவர் “அல்லாஹ்வின் தூதரே! (செல்வம் என்ற) நன்மை தீமையை உருவாக்குமா?” எனக்கேட்டதும் நபி (ஸல்) அவர்கள் மௌனமாகிவிட்டார்கள். உடனே அந்த நபரிடம், ” என்ன ஆனது உமது நிலைமை? நீர் நபி (ஸல்) அவர்களிடம் பேசுகிறீர்; ஆனால் நபி (ஸல்) அவர்களோ உம்மிடம் பேசாமலிருக்கிறார்களே!” எனக் கேட்கப்பட்டது. நாங்கள் நபி(ஸல்) அவர்களுக்கு வஹீ அருளப்படுகிறது எனக் கருதினோம். அப்போது நபி (ஸல்) அவர்கள் வியர்வையைத் துடைத்துவிட்டு, “கேள்வி கேட்டவர் எங்கே?” என அவரைப் பாராட்டுவது போன்று கேட்டார்கள்.
பிறகு, “நன்மையானது தீமையை உருவாக்காது தான்; நிச்சயமாக, நீர்நிலைகளின் கரைகளில் விளைகின்ற தாவரங்களில் சில, (தம் நச்சுத் தன்மையால் அவற்றை மேய்கின்ற) கால்நடைகளைக் கொன்றுவிடுகின்றன; அல்லது மரணத்தின் விளிம்புக்கே (அவற்றைக்) கொண்டு போகின்றன; பசுமையான (நல்ல வகைத்) தாவரங்களைத் தின்பவற்றைத் தவிர! அவற்றைக் கால்நடைகள் வயிறு புடைக்கத் தின்று சூரிய ஒளியை முன்னோக்குகின்றன. மேலும் சாணம் போட்டு, சிறுநீர் கழித்து மீண்டும் மேய்கின்றன.
(இது போலவே உலகிலுள்ள) இந்தச் செல்வம் பசுமையானதும் இனிமையானதும் ஆகும். எனவே ஒரு முஸ்லிம், தன்செல்வத்திலிருந்து ஏழைகளுக்கும் அநாதைகளுக்கும் வழிப்போக்கர்களுக்கும் கொடுத்துக் கொண்டிருக்கும்வரை அது அவனுக்குச் சிறந்த தோழனாகும். யார் முறையின்றி அதை எடுத்துக் கொள்கின்றானோ அவன் உண்டும் வயிறு நிரம்பாதவனைப் போன்றவனாவான். மேலும் மறுமை நாளில் அந்தச் செல்வம் அவனுக்கு எதிராக சாட்சியம் சொல்லும்” எனக் கூறினார்கள்.
அறிவிப்பவர்: அபூசயீத் அல்குத்ரீ (ரலி)
நூல்: புகாரி-1465 , 2842
தூய்மை இறைநம்பிக்கையில் பாதியாகும். “அல்ஹம்துலில்லாஹ்‘ (எல்லாப் புகழும் அல்லாஹ்வுக்கே!) என்(று இறைவனைத் துதிப்)பது, (நன்மை மற்றும் தீமைகளை நிறுக்கக்கூடிய) தராசை நிரப்பக்கூடியதாகும். “சுப்ஹானல்லாஹி, வல்ஹம்து லில்லாஹி‘ (அல்லாஹ் தூயவன்; எல்லாப் புகழும் அவனுக்கே உரியது) என்(று அவனைத் துதிப்)பது வானங்கள் மற்றும் பூமிக்கிடையேயுள்ள இடத்தை நிரப்பிவிடக் கூடிய (அளவிற்கு அபரிமிதமான நன்மைகளைக் கொண்ட)தாகும். தொழுகை (வழிகாட்டும்) ஒளியாகும். தான தர்மம் சான்றாகும்.
பொறுமை ஒரு வெளிச்சமாகும். குர்ஆன் ஒன்று உனக்கு ஆதரவான சான்றாகும்; அல்லது எதிரான சான்றாகும். மக்கள் அனைவரும் காலையில் புறப்பட்டுச் சென்று தம்மை விற்பனை செய்கின்றனர். சிலர் தம்மை (இறைவனிடம் விற்று நரகத்திலிருந்து தம்மை) விடுவித்துக் கொள்கின்றனர். வேறு சிலர் (ஷைத்தானிடம் விற்று) தம்மை அழித்துக் கொள்கின்றனர் என்று அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்:
அறிவிப்பவர்: அபூமாலிக் அல்அஷ்அரீ (ரலி)
நூல்: முஸ்லிம்-381
குர்ஆனை ஓதி வாருங்கள். ஏனெனில், குர்ஆனை ஓதிவருபவர்களுக்கு அது மறுமையில் வந்து (இறைவனிடம்) பரிந்துரை செய்யும். இரு ஒளிச்சுடர்களான “அல்பகரா‘ மற்றும் “ஆலு இம்ரான்‘ ஆகிய இரு அத்தியாயங்களையும் ஓதி வாருங்கள். ஏனெனில், அவை மறுமை நாளில் நிழல் தரும் மேகங்களைப் போன்றோ அல்லது அணி அணியாகப் பறக்கும் பறவைக் கூட்டங்களைப் போன்றோ வந்து தம்மோடு தொடர்புள்ளவர்களுக்காக (இறைவனிடம்) வாதாடும். “அல்பகரா‘ அத்தியாயத்தை ஓதி வாருங்கள்.
அதைக் கையாள்வது வளம் சேர்க்கும். அதைக் கைவிடுவது இழப்பைத் தரும். இவ்வத்தியாயத்திற்கு முன் சூனியக்காரர்கள் செயலிழந்துபோவார்கள் என்று அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்:
அறிவிப்பவர்: அபூஉமாமா அல்பாஹிலீ (ரலி)
நூல்: முஸ்லிம்-1470
ஒவ்வொரு மனிதனுக்கும் இத்தனை சாட்சிகளை இறைவன் கண்டிப்பாகக் கொண்டு வருவான் என்று விளங்கிக் கொள்ளக் கூடாது. நல்ல விதமான காரியங்களைச் செய்த ஒருவர் தமக்கு வழங்கப்படும் கூலி சரியானதுதான் என்று ஏற்றுக்கொள்வதற்கு எத்தனை சாட்சிகள் தேவைப்படுமோ அந்தளவிற்கு இறைவன் சாட்சிகளைக் கொண்டு வருவான்.
அதுபோன்று கெட்ட செயல்களைச் செய்த ஒருவர் தமக்குக் கொடுக்கப்படும் தண்டனை நியாயமானதுதான் என்று ஏற்றுக்கொள்வதற்கு எத்தனை சாட்சிகள் தேவைப்படுமோ அதற்குரிய வகையில் அவன் சாட்சிகளை ஏற்படுத்துவான். சிலருக்கு ஒரு சாட்சியே போதுமானதாக இருக்கும். சிலருக்கு இரு சாட்சிகள் தேவைப்படலாம்.
இவ்வாறு மறுமை நாளில் நமது செயல்களுக்கு சான்றுகள், சாட்சிகள், ஆதாரங்கள் இருக்கும் என்று மார்க்கம் சுட்டிக் காட்டுவதற்கும் நோக்கம் இருக்கிறது. நல்ல காரியங்களைச் செய்பவர்கள் நமது செயல்களுக்குத் தக்க வெகுமதிகள் கிடைக்காதோ என்று தவறுதலாக நினைத்து தளர்ந்து விடக்கூடாது.
கெட்டவர்கள் எவரும் நம்மை எதுவும் செய்ய முடியாது என்று தைரியமாக இருந்துவிடாது. ஒவ்வொரு நேரத்திலும் நாம் கவனிக்கப்படுகிறோம்; நம்மைச் சுற்றி சாட்சிகள் இருக்கின்றன என்பதை நினைவில் கொள்ள வேண்டும். இதைக் கவனத்தில் கொண்டு நல்ல முறையில் செயல்பட்டு மறுமையில் மகத்தான வெற்றி பெறுவதற்கு இறைவன் நமக்கு அருள்புரிவானாக!
வாஆகிறு தஃவானா அனில்ஹம்துலில்லாஹி ரப்பில் ஆலமீன்.
Comments
Post a Comment