உடல் உறுப்புகளின் சாட்சி ஜின்களின் சாட்சி
உடல் உறுப்புகளின் சாட்சி
ஜின்களின் சாட்சி
நாம் செய்யும் செயல்கள் யாருக்கும் தெரியாது என்று பலரும் பல்வேறு காரியங்களில் ஈடுபடுகிறார்கள். திரை மறைவில் தைரியமாக தப்பும் தவறுமான காரியங்களில் இறங்குகிறார்கள். இத்தகையவர்கள் ஒன்றைப் புரிந்து கொள்ள வேண்டும். எந்தக் கை, கால்களை வைத்து தீயகாரியங்களைச் செய்கிறார்களோ அவை மறுமையில் தாங்கள் செய்த காரியங்களைப் பற்றி பேசும்.
உலகில் நாம் நினைப்பது போன்று பேசுவதற்கு நாவைப் பயன்படுத்துகிறோம். மறுமையிலோ நாக்கு உலகில் தான் பேசியவற்றை எல்லாம் வெளிப்படுத்தும். நாம் நல்ல காரியங்களைச் செய்தவர்களாக இருப்பின் நமது உடல்களும் நல்ல வகையில் சாட்சியமளிக்கும். கெட்ட காரியங்களை செய்திருப்பின் கெட்ட விதத்தில் சாட்சியமளிக்கும்.
நமது உடல் உறுப்புகள், இவர் குர்ஆன் படித்தார், பள்ளிவாசலுக்குச் சென்றார் என்று நல்ல செய்திகளைக் கூறவேண்டுமா? அல்லது இவர் புறம் பேசினார், புகை பிடித்தார் என்று தீய தகவல்களைத் தெரிவிக்க வேண்டுமா? என்பதை நீங்களே முடிவு செய்து கொள்ளுங்கள்.
هٰذِهٖ جَهَنَّمُ الَّتِىْ كُنْتُمْ تُوْعَدُوْنَ – اِصْلَوْهَا الْيَوْمَ بِمَا كُنْتُمْ تَكْفُرُوْنَ - اَلْيَوْمَ نَخْتِمُ عَلٰٓى اَفْوَاهِهِمْ وَتُكَلِّمُنَاۤ اَيْدِيْهِمْ وَتَشْهَدُ اَرْجُلُهُمْ بِمَا كَانُوْا يَكْسِبُوْن
இதுவே உங்களுக்கு எச்சரிக்கப்பட்ட நரகம். “நீங்கள் (ஏக இறைவனை) மறுத்துக் கொண்டிருந்ததால் இன்று இதில் கருகுங்கள்!” என்று கூறப்படும். இன்றைய தினம் அவர்களின் வாய்களுக்கு முத்திரையிடுவோம். அவர்கள் செய்து கொண்டிருந்தது பற்றி அவர்களின் கைகள் நம்மிடம் பேசும்; கால்கள் சாட்சி கூறும்.
(அல்குர்ஆன்: 36:63,65)
يَّوْمَ تَشْهَدُ عَلَيْهِمْ اَلْسِنَـتُهُمْ وَاَيْدِيْهِمْ وَاَرْجُلُهُمْ بِمَا كَانُوْا يَعْمَلُوْنَ - يَوْمَٮِٕذٍ يُّوَفِّيْهِمُ اللّٰهُ دِيْنَهُمُ الْحَـقَّ وَيَعْلَمُوْنَ اَنَّ اللّٰهَ هُوَ الْحَـقُّ الْمُبِيْنُ
அவர்களின் நாவுகளும், கைகளும், கால்களும் அவர்களுக்கு எதிராக அவர்கள் செய்தவை குறித்து சாட்சியமளிக்கும். அன்றைய தினம் அவர்களது உண்மையான கூலியை அவர்களுக்கு அல்லாஹ் கொடுப்பான். அல்லாஹ் உண்மையானவன்; தெளிவு படுத்தக்கூடியவன் என்பதை அவர்கள் அறிந்து கொள்வார்கள்.
(அல்குர்ஆன்: 24:24,25)
وَيَوْمَ يُحْشَرُ اَعْدَآءُ اللّٰهِ اِلَى النَّارِ فَهُمْ يُوْزَعُوْنَ
حَتّٰٓى اِذَا مَا جَآءُوْهَا شَهِدَ عَلَيْهِمْ سَمْعُهُمْ وَاَبْصَارُهُمْ وَجُلُوْدُهُمْ بِمَا كَانُوْا يَعْمَلُوْنَ
وَقَالُوْا لِجُلُوْدِهِمْ لِمَ شَهِدْتُّمْ عَلَيْنَا ؕ قَالُوْۤا اَنْطَقَنَا اللّٰهُ الَّذِىْۤ اَنْطَقَ كُلَّ شَىْءٍ وَّهُوَ خَلَقَكُمْ اَوَّلَ مَرَّةٍ وَّاِلَيْهِ تُرْجَعُوْنَ
وَمَا كُنْتُمْ تَسْتَتِرُوْنَ اَنْ يَّشْهَدَ عَلَيْكُمْ سَمْعُكُمْ وَلَاۤ اَبْصَارُكُمْ وَلَا جُلُوْدُكُمْ وَلٰكِنْ ظَنَنْتُمْ اَنَّ اللّٰهَ لَا يَعْلَمُ كَثِيْرًا مِّمَّا تَعْمَلُوْنَ
وَذٰلِكُمْ ظَنُّكُمُ الَّذِىْ ظَنَنْتُمْ بِرَبِّكُمْ اَرْدٰٮكُمْ فَاَصْبَحْتُمْ مِّنَ الْخٰسِرِيْنَ
அல்லாஹ்வின் பகைவர்கள் நரகை நோக்கித் திரட்டப்படும் நாளில் அவர்கள் வகைப்படுத்தப்படுவார்கள். முடிவில் அவர்கள் அங்கே வந்ததும் அவர்களுக்கு எதிராக அவர்களின் செவியும், பார்வைகளும், தோல்களும் அவர்கள் செய்து கொண்டிருந்தவை பற்றி சாட்சி கூறும். “எங்களுக்கு எதிராக ஏன் சாட்சி கூறினீர்கள்?” என்று அவர்கள் தமது தோல்களிடம் கேட்பார்கள்.
“ஒவ்வொரு பொருளையும் பேசச் செய்த அல்லாஹ்வே எங்களையும் பேசச் செய்தான். முதல் தடவை அவனே உங்களைப் படைத்தான். அவனிடமே திரும்பக் கொண்டு வரப்பட்டுள்ளீர்கள்!” என்று அவை கூறும். உங்கள் செவியும், பார்வைகளும், உங்கள் தோல்களும் உங்களுக்கு எதிராக சாட்சியம் அளிக்காமலிருக்க (அவற்றுக்குத் தெரியாமல்) நீங்கள் மறைத்ததில்லை.
நீங்கள் செய்தவற்றில் அதிகமானவற்றை அல்லாஹ் அறிய மாட்டான் என்று நினைத்தீர்கள். இதுவே உங்கள் இறைவனைப் பற்றி உங்களது எண்ணம். அது உங்களை அழித்து விட்டது. எனவே நஷ்டமடைந்தோரில் ஆகிவிட்டீர்கள்.
(அல்குர்ஆன்: 41:19-23)
اجْتَمَعَ عِنْدَ البَيْتِ قُرَشِيَّانِ وَثَقَفِيٌّ – أَوْ ثَقَفِيَّانِ وَقُرَشِيٌّ – كَثِيرَةٌ شَحْمُ بُطُونِهِمْ، قَلِيلَةٌ فِقْهُ قُلُوبِهِمْ، فَقَالَ أَحَدُهُمْ: أَتُرَوْنَ أَنَّ اللَّهَ يَسْمَعُ مَا نَقُولُ؟ قَالَ الآخَرُ: يَسْمَعُ إِنْ جَهَرْنَا وَلاَ يَسْمَعُ إِنْ أَخْفَيْنَا، وَقَالَ الآخَرُ: إِنْ كَانَ يَسْمَعُ إِذَا جَهَرْنَا فَإِنَّهُ يَسْمَعُ إِذَا أَخْفَيْنَا، فَأَنْزَلَ اللَّهُ عَزَّ وَجَلَّ: {وَمَا كُنْتُمْ تَسْتَتِرُونَ أَنْ يَشْهَدَ عَلَيْكُمْ سَمْعُكُمْ وَلاَ أَبْصَارُكُمْ وَلاَ جُلُودُكُمْ} [فصلت: 22] الآيَةَ
இறையில்லம் (கஅபாவிற்கு) அருகில் குறைஷியரில் இருவரும் ஸகஃபியரில் ஒருவரும் (ஆக மூன்று பேர் ஓரிடத்தில்) ஒன்றுகூடினர். அவர்களின் வயிறுகளில் கொழுப்பு நிறைய இருந்தது. இதயங்களில் சிந்தனை குறைவாக இருந்தது. அவர்களில் ஒருவர், “நாம் பேசுவதை அல்லாஹ் கேட்கிறான் என்று நீங்கள் கருதுகின்றீர்களா?” என்று கேட்டார். மற்றொருவர், “நாம் சப்தமாகப் பேசினால் அவன் கேட்கின்றான். நாம் இரகசியமாகப் பேசினால் அவன் கேட்பதில்லை” என்று பதிலளித்தார்.
(அவர்களில்) இன்னும் ஒருவர், “நாம் சப்தமிட்டுப் பேசும்போது அவன் கேட்பானெனில் நாம் இரகசியமாகப் பேசும் போதும் அவன் கேட்கத்தான் செய்வான்” என்று கூறினார்.
அப்போது அல்லாஹ், “உங்கள் செவியும், பார்வைகளும், உங்கள் தோல்களும் உங்களுக்கு எதிராக சாட்சியம் அளிக்காமலிருக்க (அவற்றுக்குத் தெரியாமல்) நீங்கள் மறைத்ததில்லை” எனும் வசனங்களை (அல்குர்ஆன்: 41:22) அருளினான்.
அறிவிப்பவர்: அப்துல்லாஹ் பின் மஸ்ஊத் (ரலி)
நூல்: புகாரி-4817
ஜின்களின் சாட்சி
மனித இனத்தைப் போன்று ஜின் எனும் இனமும் படைக்கப்பட்டுள்ளது. மனிதர்களைக் காட்டிலும் வலிமையான படைப்பினமான ஜின்கள் பூமியில் வாழ்ந்து கொண்டிருக்கிறார்கள். இத்தகைய ஜின்களை நாம் பார்க்க முடியாவிட்டாலும் அவர்கள் நம்மைப் பார்த்துக் கொண்டிருக்கிறார்கள்.
நமது செயல்களைக் கவனித்துக் கொண்டிருக்கிறார்கள். அல்லாஹ் நினைத்தால் நமது காரியங்கள் எப்படி இருந்தது என்பதற்கு நம்மைப் பற்றியறிந்த ஜின்களையும் சாட்சிகளாகக் கொண்டு வருவான் என்பதைத் தெரிந்து கொள்ள வேண்டும். இதைப் பின்வரும் செய்தியை கவனிப்பதன் மூலம் தெரிந்து கொள்ளலாம்.
அப்துல்லாஹ் பின் அப்திர் ரஹ்மான் (ரஹ்) அவர்கள் கூறியதாவது:
அபூசயித் அல்குத்ரீ (ரலி) அவர்கள் என்னிடம் “நீங்கள் ஆடுகளையும் (அவற்றை மேய்த்திட) பாலைவனத்தையும் நேசிப்பதை நான் பார்க்கின்றேன். நீங்கள் உங்கள் ஆடுகளுடன் இருக்கும்போது தொழுகைக்காக பாங்கு சொன்னால் உங்கள் குரலை உயர்த்தி அழையுங்கள். ஏனெனில், பாங்கு சொல்பவரின் குரலை வழிநெடுகிலும் கேட்கின்ற ஜின்னாக இருந்தாலும் மனிதனாக இருந்தாலும் வேறு எதுவாக இருந்தாலும் அவர்கள் அவருக்காக மறுமைநாளில் நிச்சயம் சாட்சியம் அளிப்பார்கள்” என்று சொல்லிவிட்டு, “இதை நான் அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களிடமிருந்து செவியுற்றேன்” என்று சொன்னார்கள்.
நூல்: புகாரி-609 , 7548
Comments
Post a Comment