ஒருவருக்கொருவர் சாட்சியாக இருக்கும் மனிதர்கள்
ஒருவருக்கொருவர் சாட்சியாக இருக்கும் மனிதர்கள்
இவ்வுலகில் வாழும் போது மனிதர்கள், தங்களது விருப்பு வெறுப்புகளுக்குத் தோதுவான குணம் கொண்டவர்களுடன் சேர்ந்து செயல்படுவதைப் பார்க்கிறோம். ஒவ்வொருவரும் மற்றவர்களுடன் சேர்ந்து நற்காரியங்களையோ அல்லது தீய காரியங்களையோ செய்கிறார்கள். பல்வேறு காரியங்களில் ஒருவருக்கொருவர் உதவிக் கொள்கிறார்கள். ஆதரவு தெரிவித்துக் கொள்கிறார்கள்.
இங்கே இப்படி இருக்கும் மனிதர்கள், மறுமை நாளில் மற்றவர்களுக்கு சாட்சிகளாக இருப்பார்கள். நாம் அனைவரும் பிறரைப் பற்றி தெரிந்து வைத்திருக்கும் செயல்களுக்கு சாட்சியம் செல்லும் நிலையில் நின்று கொண்டிருப்போம். இதற்கு ஏராளமான சான்றுகள் இருக்கின்றன.
இந்த வகையில், ஒவ்வொரு சமுதாயத்தாருடைய காரியங்களுக்கும் அவர்களுக்கு அனுப்பப்பட்ட இறைத்தூதர்கள் சாட்சியாளர்களாக இருப்பார்கள். தங்களுடைய சமுதாயத்தினர் செய்திருக்கும் காரியங்கள் தாங்கள் போதித்தவையா? இல்லையா? என்பதை அவர்கள் தெளிவுபடுத்துவார்கள். நபிமார்களுக்குக் கட்டுப்பட்டு வாழ்ந்தவர்கள் யார்? மாறு செய்து தட்டழிந்தவர்கள் யார்? என்பது அன்றைய தினம் வெட்ட வெளிச்சமாகிவிடும். இதற்குரிய சான்றுகளைக் காண்போம்.
فَكَيْـفَ اِذَا جِئْـنَا مِنْ كُلِّ اُمَّةٍ ۭ بِشَهِيْدٍ وَّجِئْـنَا بِكَ عَلٰى هٰٓؤُلَاۤءِ شَهِيْدًا ؕ
(முஹம்மதே!) ஒவ்வொரு சமுதாயத்திற்கும் சாட்சியை நாம் கொண்டு வந்து, இவர்களுக்கு எதிராக உம்மைச் சாட்சியாக நாம் கொண்டு வரும் போது (இவர்களின் நிலைமை) எப்படி இருக்கும்?
(அல்குர்ஆன்: 4:41,42)
وَيَوْمَ نَـبْعَثُ فِىْ كُلِّ اُمَّةٍ شَهِيْدًا عَلَيْهِمْ مِّنْ اَنْفُسِهِمْ وَجِئْنَا بِكَ شَهِيْدًا عَلٰى هٰٓؤُلَاۤءِ ؕ
(அது) ஒவ்வொரு சமுதாயத்திலும் அவர்களிலிருந்தே அவர்களுக்கு எதிரான சாட்சியை நாம் நிறுத்தி, (முஹம்மதே!) உம்மை இவர்களுக்கு எதிரான சாட்சியாகக் கொண்டு வரும் நாள்!
(அல்குர்ஆன்: 16:89)
وَاِنْ مِّنْ اَهْلِ الْكِتٰبِ اِلَّا لَيُـؤْمِنَنَّ بِهٖ قَبْلَ مَوْتِهٖ ۚ وَيَوْمَ الْقِيٰمَةِ يَكُوْنُ عَلَيْهِمْ شَهِيْدًا ۚ
வேதமுடையோரில் ஒவ்வொருவரும் அவர் (ஈஸா, மீண்டும் வந்து) மரணிப்பதற்கு முன் அவரை நம்பாமல் இருக்க மாட்டார்கள். கியாமத் நாளில் அவர் அவர்களுக்கு எதிரான சாட்சியாக இருப்பார்.
(அல்குர்ஆன்: 4:159)
(நபியவர்களின் பெரிய தந்தை) அபூதாலிபுக்கு மரணம் நெருங்கியபோது நபி(ஸல்) அவர்கள் அவரிடம் வந்தார்கள். அங்கு அபூஜஹ்ல் பின் ஹிஷாம், அப்துல்லாஹ் பின் அபீஉமய்யா ஆகிய இருவரும் இருப்பதைக் கண்டார்கள். நபி (ஸல்) அவர்கள் அபூதாலிபிடம், “எனது பெரிய தந்தையே! லாயிலாஹ இல்லல்லாஹ் (அல்லாஹ்வைத் தவிர வேறு இறைவனில்லை) எனச் சொல்லி விடுங்கள்! அதன் மூலம் நான் அல்லாஹ்விடம் உங்களுக்காகச் சாட்சியம் கூறுவேன்” எனக் கூறினார்கள்.
அப்போது அபூ ஜஹ்லும் அப்துல்லாஹ் பின் அபீ உமய்யாவும், “அபூதாலிபே‘ அப்துல் முத்தலிபின் மார்க்கத்தைப் புறக்கணிக்கப் போகின்றீரா?” எனக் கேட்டனர். இவ்வாறு நபி (ஸல்) அவர்கள் ஒருபுறமும் அவ்விருவரும் மறுபுறமுமாக அவரை வற்புறுத்திக் கொண்டிருக்கும்போது அபூதாலிப் கடைசியாக, “நான் அப்துல் முத்தலிபின் மார்க்கத்திலேயே (மரணிக்கின்றேன்)” என்று கூறியதோடு “லாஇலாஹ இல்லல்லாஹ்‘ எனக் கூறவும் மறுத்துவிட்டார். அப்போது நபி (ஸல்) அவர்கள், “அல்லாஹ்வின் மீது ஆணையாக! நான் தடுக்கப்படும்வரை உங்களுக்காகப் பாவ மன்னிப்புக் கோருவேன்” என்று கூறினார்கள்.
அப்போது “இணை வைப்பவர்களுக்கு பாவமன்னிப்புக் கோருவது நபிக்கும் ஈமான் கொண்டவர்களுக்கும் தகுதியானதன்று” எனும் (அல்குர்ஆன்: 9:13) ஆவது வசனத்தை அல்லாஹ் அருளினான்.
அறிவிப்பவர்: முஸய்யிப் (ரலி)
நூல்: புகாரி-1360
நபி (ஸல்) அவர்கள், உஹுதுப் போரில் கொல்லப்பட்டவர்களில் இரண்டிரண்டு நபர்களை ஒரே ஆடையில் கஃபனிட்டுவிட்டு, “இவர்களில் குர்ஆனை அதிகம் அறிந்தவர் யார்?” எனக் கேட்டார்கள். இருவரில் ஒருவர் சுட்டிக் காட்டப்பட்டதும் அந்த ஒருவரது உடலைக் கப்ரின் உட்குழியில் முதலில் வைத்துவிட்டு, “இவர்களுக்கு மறுமை நாளில் நானே சாட்சியாவேன்” எனக் கூறினார்கள்.
பின்பு இரத்தத்தோடே அடக்குமாறு பணித்தார்கள். இவர்கள் நீராட்டப்படவோ இவர்களுக்கு (ஜனாஸாத் தொழுகை) தொழுவிக்கப்படவோ இல்லை.
அறிவிப்பவர்: ஜாபிர் பின் அப்தில்லாஹ் (ரலி)
நூல்: புகாரி-1343 ,1353
ஒரு நாள் நபி (ஸல்) அவர்கள் (தமது இல்லத்திலிருந்து) புறப்பட்டு வந்து, இறந்தவர்களுக்காக (ஜனாஸாத் தொழுகை) தொழுவித்ததைப் போன்று உஹுதுப்போர் உயிர்த் தியாகிகளுக்காக (ஜனாஸாத் தொழுகை) தொழுவித்தார்கள். பிறகு சொற்பொழிவுமேடை (மிம்பர்)க்குத் திரும்பி வந்து, “(உங்களுக்கு முன்னேற்பாடுகளைச் செய்து வைப்பவனைப் போல்) நான் உங்களுக்கு முன்பே செல்கிறேன்.
நான் (அப்போது) உங்களுக்கு சாட்சியம் கூறுவேன். அல்லாஹ்வின் மீதாணையாக! நான் இப்போது (கவ்ஸர் எனும்) எனது தடாகத்தைக் காண்கிறேன். மேலும், எனக்கு பூமியின் கருவூலங்களின் திறவுகோல்கள்‘ வழங்கப்பட்டுள்ளன. மேலும், அல்லாஹ்வின் மீதாணையாக! என(து இறப்பு)க்குப் பின்னால் நீங்கள் இணைவைப்பவர்களாக ஆகிவிடுவீர்களோ என்று நான் அஞ்சவில்லை. எனினும் நீங்கள் உலகத்திற்காக ஒருவரோடொருவர் போட்டியிடுவீர்களோ என்றுதான் நான் அஞ்சுகிறேன்” என்று சொன்னார்கள்.
அறிவிப்பவர்: உக்பா பின் ஆமிர் (ரலி)
நூல்: புகாரி-1344
ஒருவர் நன்மையான மற்றும் தீமையான காரியங்களைச் செய்யும் போது மற்றவர்கள் பார்த்துக் கொண்டிருக்கிறார்கள். அனைவரும் அடுத்தவர்களால் கவனிக்கப்டுகிறார்கள். இப்படியிருக்கும் மனிதர்கள், மறுமையில் அவர்கள் செய்த காரியங்களுக்கு சாட்சியாக இருப்பார்கள்.
இவர்கள் நல்லவிதமான காரியங்களைச் செய்தார்கள் என்று நல்லவர்கள், நல்லவர்களுக்கு சாட்சியம் சொல்வார்கள். இதுபோன்று குற்றவாளிகள் குற்றவாளிக்கு எதிராக நின்று, இவர்களே எங்களை வழிகெடுத்தார்கள் என்று கூறுவார்கள். இங்கு வாழும் போது வழிகேட்டில் இருந்து கொண்டு நேர்வழியில் இருப்போரின் செயல்களை வேடிக்கை பார்ப்பவர்கள், மறுமை நாளில் இவர்கள் நல்ல காரியங்களை செய்து கொண்டிருந்தார்கள்; நாங்களோ அலட்சியமாக இருந்தோம் என்று ஆதங்கப்பட்டு நல்லவர்களுக்கு ஆதரவாகக் கருத்து தெரிவிப்பார்கள் இந்த உண்மைகளை பின்வரும் ஆதாரங்கள் மூலம் அறிய முடிகிறது.
وَمَنْ اَظْلَمُ مِمَّنِ افْتَـرٰى عَلَى اللّٰهِ كَذِبًا ؕ اُولٰٓٮِٕكَ يُعْرَضُوْنَ عَلٰى رَبِّهِمْ وَ يَقُوْلُ الْاَشْهَادُ هٰٓؤُلَاۤءِ الَّذِيْنَ كَذَبُوْا عَلٰى رَبِّهِمْ ۚ اَلَا لَـعْنَةُ اللّٰهِ عَلَى الظّٰلِمِيْنَۙ
அல்லாஹ்வின் மீது பொய்யை இட்டுக் கட்டியவனை விட மிகவும் அநீதி இழைத்தவன் யார்? அவர்கள் தமது இறைவன் முன்னே கொண்டு வரப்படுவார்கள். “இவர்களே தமது இறைவனின் பெயரால் பொய்யுரைத்தோர்” என்று சாட்சிகள் கூறுவார்கள். கவனத்தில் கொள்க! அநீதி இழைத்தோர் மீது அல்லாஹ்வின் சாபம் இருக்கிறது.
(அல்குர்ஆன்: 11:18)
فَاِنْ تَوَلَّوْا فَقُوْلُوا اشْهَدُوْا بِاَنَّا مُسْلِمُوْنَ
அவர்கள் (இந்த அழைப்பைப்) புறக்கணிப்பார்களாயின், “நாங்கள் முஸ்லிம்கள் (அல்லாஹ்வுக்குக் கீழ்ப்படிபவர்கள்) என்பதற்கு நீங்களே சாட்சியாயிருங்கள்” என்று (அவர்களிடம்) கூறிவிடுங்கள்.
(அல்குர்ஆன்: 3:64)
ஸஃப்வான் பின் முஹ்ரிஸ் அல் மாஸினீ (ரஹ்) அவர்கள் கூறியதாவது:
நான் இப்னு உமர் (ரலி) அவர்களுடன், அவர்களுடைய கையைப் பிடித்தபடி சென்று கொண்டிருந்த போது ஒரு மனிதர் குறுக்கிட்டு, “(மறுமை நாளில் அல்லாஹ்வுக்கும் அவனது அடியார்களுக்குமிடையே நடைபெறும்) இரகசியப் பேச்சு பற்றி அல்லாஹ்வின் தூதரிடமிருந்து என்ன செவியுற்றீர்கள்?” என்று கேட்டார்.
அதற்கு இப்னு உமர் (ரலி) அவர்கள், “அல்லாஹு தஆலா முஃமினைத் தன் பக்கம் நெருங்கச் செய்து, அவன் மீது தன் திரையைப் போட்டு அவனை மறைத்து விடுவான். பிறகு அவனை நோக்கி, “நீ செய்த இன்ன பாவம் உனக்கு நினைவிருக்கிறதா? நீ செய்த இன்ன பாவம் உனக்கு நினைவிருக்கிறதா?’ என்று கேட்பான். அதற்கு அவன், “ஆம், என் இறைவா!‘ என்று கூறுவான். (இப்படி ஒவ்வொரு பாவமாக எடுத்துக் கூறி) அவன் (தான் செய்த) எல்லாப் பாவங்களையும் ஒப்புக் கொள்ளச் செய்வான்.
அந்த முஃமின், “நாம் இத்தோடு ஒழிந்தோம்‘ என்று தன்னைப் பற்றிக் கருதிக் கொண்டிருக்கும் போது இறைவன், “இவற்றையெல்லாம் உலகில் நான் பிறருக்குத் தெரியாமல் மறைத்து வைத்திருந்தேன். இன்று உனக்கு அவற்றை மன்னித்து விடுகிறேன்‘ என்று கூறுவான். அப்போது அவனது நற்செயல்களின் பதிவேடு அவனிடம் கொடுக்கப்படும்.
நிராகரிப்பாளர்களையும், நயவஞ்சகர்களையும் நோக்கி சாட்சியாளர்கள், “இவர்கள் தாம், தம் இறைவன் மீது பொய்யைப் புனைந்துரைத்தவர்கள். எச்சரிக்கை! இத்தகைய அக்கிரமக்காரர்கள் மீது இறைவனின் சாபம் உண்டாகும்‘ என்று கூறுவார்கள்‘ என்று நபி (ஸல்) அவர்கள் கூற நான் கேட்டிருக்கிறேன்” என்று கூறினார்கள்.
நூல்: புகாரி-2441 , 4685
கழுத்தில் இருக்கும் பதிவேட்டின் சாட்சி
நமது நடவடிக்கைகளுக்கு ஆதாரமாக ஒரு முக்கியமான ஏற்பாட்டினை வல்ல இறைவன் ஏற்படுத்தி வைத்திருக்கிறான். நமது கழுத்தில் நமது செயல்பாடுகள் பற்றிய தகவல்களை சேமிக்கும் பொருளை வைத்திருக்கிறான். பார்ப்பது, நடப்பது, கேட்பது என்ற சகல செயல்பாடுகளும் அதிலே பதிவு செய்யப்படுகின்றன. மறுமை நாளில் ஒரு மாபெரும் ஏடாக அதை அல்லாஹ் கொண்டு வருவான்.
நாம் சொல்லும் வார்த்தையின் சத்தத்தை உள்வாங்கிக் கொண்டு அந்த வார்த்தையில் இருப்பதையெல்லாம் தேடித்தரும் மென்பொருள்களை மனிதனே உருவாக்கியிருக்கிறான். மனிதனுக்கே இந்த அறிவு இருக்கும் போது, அத்தகைய மனிதனை படைத்த இறைவன் இதற்குச் சக்தி பெற்றவன் என்பதில் நாம் சந்தேகம் கொள்ள வேண்டியதில்லை. இதற்குரிய ஆதாரத்தைக் காண்போம்.
وَكُلَّ اِنْسَانٍ اَلْزَمْنٰهُ طٰۤٮِٕرَهٗ فِىْ عُنُقِهٖؕ وَنُخْرِجُ لَهٗ يَوْمَ الْقِيٰمَةِ كِتٰبًا يَّلْقٰٮهُ مَنْشُوْرًا
اِقْرَاْ كِتٰبَك َؕ كَفٰى بِنَفْسِكَ الْيَوْمَ عَلَيْكَ حَسِيْبًا ؕ
ஒவ்வொரு மனிதனுக்கும் அவனது கழுத்தில் அவனது குறிப்பேட்டை மாட்டியுள்ளோம். கியாமத் நாளில் அவனுக்காக ஒரு புத்தகத்தை வெளிப்படுத்துவோம். அதை விரிக்கப்பட்டதாக அவன் காண்பான். “உனது புத்தகத்தை நீ வாசி! உன்னைப் பற்றி கணக்கெடுக்க நீயே போதுமானவன்” (என்று கூறப்படும்).
(அல்குர்ஆன்: 17:13,௧௪)
Comments
Post a Comment